தமிழகத்தின் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகங்களில் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 515 மாவட்ட கவுன்சிலர்கள், 5 ஆயிரத்து 90 ஒன்றிய கவுன்சிலர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 243 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 214 இடங்களையும் கைப்பற்றினர். இதே போல், 2 ஆயிரத்து 099 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக கூட்டணியும், ஆயிரத்து 781 இடங்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்றின.
இந்த நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை ஆணையர்கள் முன்னிலையில் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.