உலக வேட்டி தினம் எப்போது முதல்.? ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா.!
Published : Jan 06, 2020 12:17 PM
உலக வேட்டி தினம் எப்போது முதல்.? ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா.!
Jan 06, 2020 12:17 PM
ஜனவரி 6-ம் தேதியான இன்று உலக வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி. ஆனால் இன்றைய தலைமுறையினர் வேட்டி கட்டும் வழக்கத்தை அரிதாக்கி கொண்டுள்ளனர்.
பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜனவரி 6 உலக வேட்டி தினமாக அனுசரிக்கப்படும் என யுனெஸ்கோ அறிவித்தது. இதனை அடுத்து மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் இன்று சர்வதேச வேட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச வேட்டி தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் கைத்தறி நெசவு தொழிலை காப்பது, இளைஞர்களிடம் வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிப்பதும் ஆகும்.
முன்மொழிந்த சகாயம்:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சகாயம் ஐ.ஏ.எஸ், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார். அப்போது அவர் எழுதிய கடிதத்தில் ரோமானியர்களுக்கே ஆடைகள் அனுப்பி வைத்தவர்கள் தமிழர்கள். ஆனால் நம் பாரம்பரியத்தை தற்போது மறந்து நிற்கிறோம். எனவே ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் ஏதாவதொரு நாளை வேட்டி தினமாக கொண்டாடுவோம் என தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதினார்.
நல்ல வரவேற்பு:
சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் இந்த கருத்துக்கு தமிழர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் வேட்டி அணிந்து வந்து கொண்டாடினர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
பின்னர் இந்த விவகாரம் உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோவின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதனை அடுத்து ஜனவரி 6-ம் தேதி தமிழர்களின் பாரம்பரிய உடையை போற்றும் வகையில் சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக யுனெஸ்கோ அறிவித்தது. இதனை அடுத்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் உலக வேட்டி தினம் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது.
வேட்டி மயமான அண்டை மாநிலம்:
அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள பல கோவில்களில் ஆண்கள் வேட்டி அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் அம்மாநிலத்தில் பெரும்பாலான ஆண்களை வேட்டியுடன் தான் பார்க்க முடியும். வீட்டில் இருக்கும் போதும் பெரும்பாலும் வேட்டியையே அணிகின்றனர். சுருக்கமாக சொல்ல போனால் கேரளா முழுவதும் வேட்டி மயமாக காட்சியளிக்கிறது.
பாரம்பரியம் காப்போம்:
ஆனால் எங்களது பாரம்பரிய உடை வேட்டி என்று மார்தட்டி கொள்ளும் தமிழர்களாகிய நாமோ, வீட்டிலும் வேட்டி அணிவதில்லை. வெளியில் சென்றால் கூட நவ நாகரீக உடைகள் எனப்படும் முக்கால் கால் சட்டைகளையும், அரை கால் சட்டைகளையும் போட்டு கொண்டு ஸ்டைலாக திரிகிறோம். பாரம்பரிய உடையான வேட்டி அணியும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளாமல் ஏனோ தவிர்க்கிறோம்.
பண்டிகைகளுக்கும், விழாக்களுக்கும், கோவில்களுக்கும் செல்லும்போது மட்டும் வேட்டி அணியாமல், வீட்டில் இருக்கும் போதும் மேலும் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் வேட்டி கட்டி வீரத்தமிழராக திமிறுவோம்..