அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷெரீபுடன் தொலைபேசியில் பேசிய அவர், இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் மிகவும் கவலைக்கிடமானது என்ற இந்தியாவின் கருத்தை தாம் ஈரான் அமைச்சருடன் பகிர்ந்து கொண்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
போர் பதற்றம் உள்ளிட்டவற்றை தவிர்க்க இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் என தாம் உறுதி அளித்துள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். இதே போன்று ஓமன் வெளியுறவு அமைச்சர் யூசுப் அலவியுடன் ஈரான் விவகாரத்தை விவாதித்த அவர், வளைகுடா பகுதியில் பாதுகாப்பான சூழலும், நிலைத்தன்மையும் நீடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.