தமிழகத்தில் மேலும் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முதல்கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்குவது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்று மருத்துவ இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இதில் மொத்தம் 3 ஆயிரத்து 350 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. திருப்பூர், உதகை, நாமக்கல், திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.