குடியுரிமை திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி, யாராவது வன்முறையை தூண்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ராகுலும், பிரியங்காவும், வன்முறையை தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
அடுத்த மாதம், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் டெல்லியில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை அகற்றி, ஆட்சியை பிடிக்க, பாஜக முழுவீச்சில் களமாடுகிறது.
டெல்லியில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, மக்களை தவறாக வழிநடத்தி, கட்டுக்கதைகளை அவித்துவிட்டு, வன்முறையை தூண்டிவிடுவதாக அமித் ஷா குற்றம்சாட்டினார்.
வன்முறையாளர்களின் ஆதரவாளராகவே பிரியங்கா காந்தி மாறிவிட்டதோடு, அவர்களின் வீடுகளுக்கும், அவர் படையெடுப்பதாகவும் புகார் தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லீம்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையிருக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என மீண்டும் ஒருமுறை உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக, அமித் ஷா குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் உள்ள நான்கான சாஹிப் குருத்துவாராவில் நடைபெற்ற தாக்குதல் வேதனையளிப்பதாகவும், அது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்போருக்கான பதிலாக அமைந்திருப்பதாகவும் அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தலித்துகளுக்கும், ஏழை மக்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்றும், அமித் ஷா கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி, யாராவது வன்முறையை தூண்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமித் ஷா எச்சரித்திருக்கிறார்.