தமிழகத்துக்குள் நுழைந்த கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலரது காரில் இருந்து அவர்களது கொடியை தமிழக போலீசார் அகற்றியதாகக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓசூர் எல்லையை முற்றுகையிட முயன்றனர்.
கடந்த மாதம் ஓசூர் வழியாக தமிழகத்துக்குள் வந்த கன்னட ரக்சன என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்களது காரில் பெரிய அளவிலான தங்களது இயக்கக் கொடியை கட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றை அகற்றிவிட்டு சிறிய அளவிலான கொடியை பொருத்திக்கொள்ளுமாறு தமிழக போலீசார் கூறியதாகத் தெரிகிறது.
அப்போது நடந்த வாக்குவாதத்தை படம் பிடித்துக்கொண்டு அந்த கும்பல், சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டுள்ளது. இதனையடுத்து கன்னட ரக்சன அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொடிகளுடன் தமிழக எல்லைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை கர்நாடக போலீசார் தடுத்து கைது செய்தனர்.