​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்கசிவால் தீ விபத்து.. தீயில் சிக்கி உயிரிழந்த பெண்..!

Published : Jan 05, 2020 3:47 PM

மின்கசிவால் தீ விபத்து.. தீயில் சிக்கி உயிரிழந்த பெண்..!

Jan 05, 2020 3:47 PM

சென்னை சூளைமேட்டில் தெருவோரம் இருந்த மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில், நடந்து சென்ற பெண் மீது தீப்பற்றி உடல் கருகி அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரைச் சேர்ந்தவர் 35 வயதான பெண் லீமா ரோஸ். நேற்றிரவு 8 மணியளவில் வீட்டிற்கு அருகில் ஆண்டவர் தெருவில் உள்ள மளிகை கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது தெரு ஓரத்தில் இருந்த மின் இணைப்பு பெட்டிக்கு கீழிருந்த மின்கடத்திகளில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. வெடித்து சிதறிய நெருப்பு அவ்வழியாக சென்ற லீமா ரோஸ் மீது தெறிக்க, அவர் அணிந்திருந்த நைட்டி மீது தீப்பற்றியுள்ளது.

நைட்டியில் பற்றிய தீயால் அலறி துடித்த அவரை அப்பகுதியினர் ஓடிவந்து தீயை அணைத்து காப்பாற்றினர். இருப்பினும்  உடல் மூழுவது தீக்காயம் ஏற்பட்டதால் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். 

இதையடுத்து, மின்கசிவு மூலம் தீ பற்றிய மின் இணைப்பு பெட்டியை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். தீ பற்றியதற்கான காரணம் குறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த பெண் லீமா ரோஸ் தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்டவர். அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் துப்புரவு பணி செய்து வந்தார். கணவரை இழந்த இவர் தனது மனநலம் குன்றிய மகனை பராமரித்து வாழ்ந்து வந்தார்.

இவரது இழப்பால் மனநலம் குன்றிய மகன் நிராதரவான நிலையில், அவரை உறவினர்களிடம் ஒப்படைப்பதா? காப்பகத்தில் சேர்ப்பதா? என போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.