தமிழ்நாட்டில், அண்மையில், வெளியான குரூப் - 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவை அலுவலர் உள்ளிட்ட 8 வெவ்வேறு பதவிகளில் காலியாக இருந்த 9,398 இடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்று, நவம்பர் 12ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
16 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 12 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக TNPSC அறிவித்தது. நடைபெற்று முடிந்த குரூப் - 4 தேர்வை, ராமநாதபுரம் மாவட்டத்தின், ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய இரு மையங்களில் தேர்வெழுதிய தேர்வர்களில் 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றிருப்பதில் சந்தேகம் எழுவதாக பிற தேர்வர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 15 பேர் மாநில அளவில் முதல் 15 இடங்களில் எவ்வாறு தேர்ச்சி பெற்றனர்? என்பது ஐயத்தை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் எப்படி தேர்வாகினர்? என்றும் பிற தேர்வர்கள் வினவியுள்ளனர்.
ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் - 4 தேர்வு நடைபெற்ற நேரத்தில் கமுதி வட்டாட்சியர் மீனலோசனம், கூடுதலாக வழங்கப்பட்ட OMR விடைத்தாள்களை அவருடைய அலுவலகத்தில் 10 நாட்கள் வரை பதுக்கி வைத்திருந்து, பிறகு TNPSC அலுவலகத்தில் ஒப்படைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது.
ஒரே மாவட்டத்தின் இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் மாநில அளவில் முதல் 100 இடங்களைப் பிடித்திருப்பதில் முறைகேடு நடைபெற்றதா? ஏன் 10 நாட்கள் வரை விடைத்தாள்களை வைத்திருந்தனர்? என்பது குறித்து TNPSC உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய மையங்களில் குரூப்-4 தேர்வு எழுதியோரின் முடிவுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த, அம்மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உத்தரவிட்டிருக்கிறார்.
விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கும் ஆட்சியர் வீர ராகவ ராவ், அதற்கேற்ப விசாரணை துரிதப்படுத்தப்படும் என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.