வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சியால் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் சிவகிரியில் அதிகபட்சமாக 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வாட்ராப் பகுதியில் 4 செ.மீட்டரும், ராஜபாளையத்தில் 3 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.