​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாக்தாதில் அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Published : Jan 05, 2020 10:51 AM

பாக்தாதில் அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Jan 05, 2020 10:51 AM

அமெரிக்க நிலைகள் மற்றும் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், ஈரானில் உள்ள பழமையான, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்கள் தாக்கி அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். 

ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள விமான நிலையத்தின் மீது அண்மையில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று ஈரான் மிரட்டியுள்ளதால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம், அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள ஈராக்கின் பலாட் (Balad) விமான படைதளம், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கிரீன் ஜோன் (green zone) பகுதியை குறிவைத்து ராக்கெட்டுகள் வீசி நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஒரு ராக்கெட், கிரீன் ஜோன் பகுதிக்குள் விழுந்தது. மேலும் ஓர் ராக்கெட், கிரீன் ஜோன் பகுதி அருகே விழுந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை என்று ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

ராக்கெட்டுகளை வீசி யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறித்து தகவல் இல்லை. எனினும், ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் ஈரானில் 1979ம் ஆண்டு அமெரிக்கர்கள் 52 பேர் சிறைபிடித்து வைக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, அதே எண்ணிக்கையிலான கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கி அழிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அந்த 52 இடங்களும், ஈரானுக்கும், ஈரான் கலாச்சாரத்துக்கும் மிகவும் முக்கியமானவை என்பதையும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் மீது மிக கடுமையாகவும், மிக வேகமாகவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்துள்ள டிரம்ப், மேலும் அச்சுறுத்தல்கள் நிலவுவதை அமெரிக்கா விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.