​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆல் இன் ஒன் ஸ்மார்ட் கம்பம்..! சென்னையில் புதிய முயற்சி

Published : Jan 05, 2020 6:47 AM



ஆல் இன் ஒன் ஸ்மார்ட் கம்பம்..! சென்னையில் புதிய முயற்சி

Jan 05, 2020 6:47 AM

பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை தகவல்களை பகிர்வதற்காக, மழை அளவு மற்றும் காற்று மாசைக் கணக்கிடும் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணி சென்னையில் தொடங்கியுள்ளது. இதன் சிறம்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு ...

சாலையோரம் இருக்கின்ற சாதாரண மின்விளக்கு கம்பம் போலத் தான் தோற்றமளிக்கிறது இந்த கம்பம். புயல்,மழை போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பினையும் தகவல்களையும் தெரிவிக்க ஒலிபெருக்கிகள், கண்காணிப்பு கேமரா, 360 டிகிரி சுழல் கேமரா, ஸ்மார்ட் சென்சார், அவசரகால பட்டன் போன்ற அமசங்களோடு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட் கம்பம்.

இதற்காக,சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் ஒவ்வொரு ஸ்மார்ட் கம்பமும் இணைக்கப்பட்டிருக்கும். கம்பத்தில் உள்ள கேமரா மூலம் சுற்றியுள்ள நிகழ்வுகள் 24 மணிநேரமும் பதிவு செய்யப்படுவதால் குற்றச்செயல்களை கண்காணிக்கவும், அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தவும் உதவும் என்கிறார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். மழை அளவு கண்கானிப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பதன் காரணம் குறித்தும் விளக்குகிறார்.

பேரிடர் காலத்தில் தொலைத் தொடர்பு துண்டித்தாலும், இதில் உள்ள ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் மற்றும் தகவல்களை கட்டுப்பாட்டு அறையிலிருந்தே தெரியப்படுத்த முடியும். கம்பத்தில் உள்ள பட்டன் உதவியுடன் பொதுமக்களும் உதவிக்கு அழைக்கமுடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

கம்பத்தில் உள்ள காற்று மாசு கணக்கிடும் கருவி, குறிப்பிட்ட கம்பம் உள்ள பகுதியில் உள்ள மாசு அளவினை துல்லியமாக கண்காணித்து கணக்கிடும். காற்று மாசு குறிப்பிட்ட அளவினை விட அதிகரிக்கும் போது கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை கொடுக்கும் என்பதால் கடுமையான காற்று மாசு ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்க மிகவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களில் பணிகள் நிறைவடைந்து இந்த ஸ்மார்ட் கம்பங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அதன் பயன்பாட்டினையும் தேவையும் ஆய்வு செய்த பின்னர் மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.