​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உடலெல்லாம் சூடு.. காதலன் சித்ரவதை..! காதல் பொல்லாதது

Published : Jan 05, 2020 6:21 AM



உடலெல்லாம் சூடு.. காதலன் சித்ரவதை..! காதல் பொல்லாதது

Jan 05, 2020 6:21 AM

கண்ணில் விழுந்து இதயம் நுழைந்த காதலனை நம்பி வீட்டைவிட்டு சென்ற இளம்பெண் ஒருவர், உடல் முழுவதும் சூடு போட்ட நிலையில் குற்றுயிரும் குலைஉயிருமாக வீட்டின் முன்பு வீசப்பட்ட கொடுமை, திருச்செந்தூர் அருகே அரங்கேறி உள்ளது. காதல் பொல்லாதது என்பதற்கு சாட்சியான சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு .

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள செட்டியாபத்தை சேர்ந்த சக்திவேல் - வசந்தா தம்பதியரின் மகள் கலைசெல்வி என்பவர் தான் காதலில் விழுந்து காதலனை நம்பிச்சென்று சித்ரவதைக்குள்ளானவர்..!

கலைச்செல்வியின் தந்தை சக்திவேல் மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி வீதியில் விழுந்து கிடந்த நிலையில் குழந்தைகளை காப்பாற்ற தாய் வசந்தா திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது. கலைச்செல்வி தந்தையுடன் செட்டியாபத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் உடன்குடி பகுதியில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலைக்குச் சென்ற கலைச்செல்வியை, தூத்துக்குடியைச் சேர்ந்த அய்யப்பன் என்ற இளைஞர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

மதுவில் மூழ்கிக் கிடக்கும் தந்தையிடம் இருந்து தாயைப் பார்க்க விரும்பிய கலைச்செல்வியை பேசிப் பேசி மயக்கிய காதலன் அய்யப்பன், திருப்பூருக்கு அழைத்துச் செல்வதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

காதலன் அய்யப்பனை நம்பி, கலைச்செல்வி திருப்பூருக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில், சனிக்கிழமை அதிகாலை செட்டியாபத்து பகுதியில் குற்றுயிரும் குலைஉயிருமாக கலைச்செல்வி வீதியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது உடலில் சிகரெட் சூடு காயங்களும், முகம் மற்றும் உடலில் அடித்து துன்புறுத்தியதால் ஏற்பட்ட காயங்களும் காணப்பட்டன.

அக்கம்பக்கத்தினர் கலைச்செல்வியை மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரிடம் விசாரித்த போது, தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூட சொல்ல இயலாமல் தவித்தார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கலைச்செல்வியை திருசெந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணம் காதலன் அய்யப்பன்தான் என்று தெரிவித்தார்.

தன்னை திருப்பூருக்கு அழைத்துசென்று இரு தினங்கள் நன்றாக பழகி விட்டு ஒரு அறையில் அடைத்து வைத்து சூடுவைத்தும், அடித்து உதைத்தும் சித்ரவதை செய்த அய்யப்பன், தலைமுடியை வெட்டி துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து தப்பி வீட்டிற்கு பசியும் பட்டினியுமாக வீட்டிற்கு வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். எதற்காக அய்யப்பன் தன்னை சித்ரவதை செய்தான் என்பதை கலைச்செல்வியால் தெரிவிக்க இயலவில்லை என்று கூறப்படுகின்றது.

தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் கலைசெல்வியிடம் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தினால், அவருக்கு நேர்ந்த கொடுமைக்கான காரணம் வெளிச்சத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலர்கள் கருத்து ஒற்றுமையுடன் கடைசிவரை சேர்ந்து வாழ்ந்தால் காதல் சுகமானது. அதே நேரத்தில் கண்டதும் காதல் கொண்டு காதலன் கடைசிவரை காப்பாற்றுவான் என நம்பி வீட்டை விட்டுச்சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக அரங்கேறி இருக்கின்றது இந்த விபரீத கொடுமைகள்..!