தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்துகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஜூலை 20-ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெற்றது.
இந்நிலையில், சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நாளை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தமிழில் மொழிபெயர்த்து உரையாற்றுகிறார்.
ஆளுநர் உரையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநரின் உரை நிகழ்வுக்குப் பிறகு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப் பேரவை அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் நாளை பிற்பகலில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். வரும் வெள்ளிக்கிழமை வரை பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் பேரவையில் விவாதங்களைக் கிளப்பும் என்று கூறப்படுகிறது.