ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கச்சா எண்ணெய்யின் பன்னாட்டு விலை, 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் சூழல் உருவாகியிருக்கிறது.
அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின் சொத்துகள் மீதும், தேடித்தேடி தாக்குதல் நடத்துவதையே வாடிக்கையாக கொண்டிருந்ததால் ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் குவாசிம் சுலைமானியை (Qassem Suleimani) தீர்த்துக்கட்டியதாக அமெரிக்கத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் வலுத்துள்ளது.
வளைகுடா நாடுகள் அனைத்தும்,கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளதால், போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியிருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு, நேற்று சுமார் 3 டாலர்கள் அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பன்னாட்டு அளவிலான கச்சா எண்ணெய் விலை, இன்று, பேரல் ஒன்றிற்கு, இந்திய ரூபாய் மதிப்பில், 166 ரூபாய் அளவுக்கு உயர்ந்து, 4509 ரூபாயாக உள்ளது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத விலை உயர்வு ஆகும்.
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் ஏதாவது பதில் நடவடிக்கையில் இறங்கினால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பாரசீக வளைகுடாவில், ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடையால், சவுதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இந்தியா நம்பியிருக்கிறது.
ஆனால், சுலைமானி படுகொலைக்குப் பின்னர், ஈராக்கை மையப்படுத்தியே, தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதால், அந்நாட்டில் இருந்து, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கக்கூடிய அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. வளைகுடா நாடுகளின் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வில் மட்டுமின்றி, இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.