திருச்சுழி அருகே இரு பிரிவினர் இடையே மோதலால் போலீசார் குவிப்பு
Published : Jan 04, 2020 6:30 PM
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து சுற்றுவட்டாரத்தில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு பரளச்சியில் உள்ள அவரது சிலைக்கு செங்குளம் கிராமத்தில் இருந்து ஒரு பிரிவினர் வாகனங்களில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு கூச்சலிட்டு கொண்டே ஊர் திரும்பியதாகவும் எம்.ரெட்டியபட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு பிரிவினர் அந்த வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் இருபிரிவினரையும் அப்புறப்படுத்தினர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையின் வஜ்ரா வாகனம் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.