எங்களுக்கு பரிதாபம் தேவையில்லை.. பிறருக்கு நாங்கள் சமமாக தகவல் தொடர்பு ஒன்றே வழி- Louis Braille
Published : Jan 04, 2020 3:32 PM
எங்களுக்கு பரிதாபம் தேவையில்லை.. பிறருக்கு நாங்கள் சமமாக தகவல் தொடர்பு ஒன்றே வழி- Louis Braille
Jan 04, 2020 3:32 PM
பார்வையற்றவர்களுக்காக எழுத்து முறையை உருவாக்கிய Louis Braille-ன் 211-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த நாள் உலக Braille தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
அரிதரிது மானிடர் ஆதல் அரிது, மானிடர் ஆயினும் கூன்,குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று பாடி வைத்தார் ஒளவையார். மனிதராக பிறந்தாலும் உடல் குறைபாடின்றி பிறப்பது மிக பெரிய வரம். உடல் ஊனத்திலேயே மிகவும் சோதனைக்குரியது கண் பார்வை இல்லாமல் பிறப்பது. கை, கால், கேட்கும் திறன் இவற்றில் ஏற்படும் ஊனத்தை சகித்து கொண்டு வாழ்ந்தாலும் இந்த உலகம் எப்படிப்பட்டது என்ற அழகை கண்டு ரசிக்க முடியும்.
ஆனால் கண்பார்வை இல்லாமல் போனால் முதலில் நாம் எப்படி பிறந்திருக்கிறோம் என்றே தெரியாமல் வாழ்வோம். எவ்வளவு கொடுமை இது. கண்பார்வையற்றவர்களும் எளிமையாக படிப்பதற்காக உருவாக்கப்பட்ட எழுத்து முறையே Braille.
விபத்தில் பறிபோன பார்வை:
Louis Braille 1809-ம் வருடம் ஜனவரி 4-ம் தேதி பிரெஞ்சு நாட்டில் பிறந்தார். இவர் தனது மூன்றாவது வயதில், தந்தையின் கடையில் இருந்த தையல் ஊசியை வைத்து விளையாடிய போது எதிர்பாராமல், ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது. ஆனால் உரிய சிகிச்சை செய்யாததால் கண்பார்வையை இழக்க நேரிட்டது. நாளடைவில் ஏற்பட்ட sympathetic ophthalmia காரணத்தினால், 5 வயதிற்குள் அவர் மற்றொரு கண்ணிலும் பார்வையை இழந்தார்.
பள்ளி பருவம்:
பிரெய்லி கூப்வ்ரேயில் பத்து வயது வரை படித்தார். அவரது புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சி காரணமாக, உலகின் பார்வையற்ற குழந்தைகளுக்கான முதல் பள்ளியில் பயில இடம் கிடைத்தது. இதனை அடுத்தது கல்வி பயில பிப்ரவரி 1819-ல் பள்ளிக்கு செல்ல துவங்கினார். அந்த நேரத்தில் ராயல் இன்ஸ்டிடியூட் ஒரு நிதியுதவி இல்லாத, மோசமான சூழலில் சிக்கி இருந்தது. பள்ளியின் நிறுவனர் வாலண்டைன் ஹேசி வடிவமைத்த ஒரு அமைப்பால் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கு எவ்வாறு படிக்க வேண்டும் என கற்பிக்கப்பட்டது. ஆனால் ஹேசி அமைப்பில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதால் கண் பார்வையற்ற குழந்தைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பிரெய்லி சிஸ்டம்:
தொடர்ந்து படித்த Louis Braille தனது அபார திறமையால் அப்பள்ளியிலேயே பல உயர் பொறுப்புகளுக்கு வந்தார். எனினும் பார்வையற்றவர்களுக்கான தகவல்தொடர்பு இடைவெளியைக் குறைக்கக் கூடிய வாசிப்பு மற்றும் எழுத்து முறையை கண்டுபிடிப்பதில் பிரெய்லி உறுதியாக இருந்தார். பார்வையற்றவர்கள் என்பதற்காக தங்கள் மீது பரிதாபம் தேவை இல்லை. நாங்கள் பிறரை போல சமமாக கருதப்படவேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தார். அதற்கு தகவல்தொடர்பு ஒன்றே வழியாகும் என்றெண்ணி தீவிரமாக உழைத்து புதிய எழுத்து முறையைஉருவாக்கினார்.
மொழி அல்ல:
ப்ரெய்லி ஒரு மொழி அல்ல. பிரெய்லி என்பது உயர்த்தப்பட்ட புள்ளிகளின் அமைப்பு, இது பார்வையற்றவர்களால் அல்லது பார்வை குறைந்தவர்களால் விரல்களால் படிக்க முடியும். இதை பார்வை அற்றவர்களுக்கான கல்வி முறை எனலாம். இந்த முறையில் பார்வையற்றவர்கள் கற்றுக்கொள்வது மற்றும் படிப்பது சுலபமாக இருந்தது.
அமைப்பு:
ஒவ்வொரு ப்ரெய்லி எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு, அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.
ப்ரெய்லி குறியீடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆனது. ப்ரெய்லியில் முதல் புத்தகம் 1827 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, 1878 ஆம் ஆண்டில், பார்வையற்றோருக்கான உலக காங்கிரஸ், உலகெங்கிலும் பார்வையற்றோருக்கான வாசிப்பு மற்றும் எழுதும் முறையை ப்ரெய்லியாக மாற்ற வாக்களித்தது.
1852ம் ஆண்டு ஜனவரி 6 அன்று தனது 43வது வயதில் மரணம் அடைந்தார் Louis Braille.
பார்வை அற்றவர்கள் எளிமையாக கல்வி பயில புதிய எழுத்து முறையை உருவாக்கிய Louis Braille எந்நாளும் போற்றுதலுக்குரியவர்...