நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வரும் 6ஆம் தேதி பதவியேற்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். வாக்கு எண்ணும் பணி நேற்றோடு நிறைவடைந்து, வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் மாநில தேர்தல் ஆணையர் கூறினார். 25 பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
போட்டியிட்டவர்களின் பெயர்கள் துணை வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருந்ததால், இந்த 25 பதவியிடங்களுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.
வாக்கு எண்ணும் பணி அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றது என்றும், புகார்கள் தெரிவிக்கப்பட்டபோது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அவர் பதிலளித்தார். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களைவிட இந்த தேர்தல் நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடைபெற்றது என பழனிசாமி கூறினார். வாக்கு எண்ணும் நடைமுறையில் அதிகாரிகளால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் உறுதியளித்தார்.