திருச்சி அருகே 11ம் வகுப்பு படித்து வந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிறுமியின் காதலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருச்சி மணிகண்டம் அடுத்துள்ள வடக்குநாகமங்கலம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி, கடந்த 31ம் தேதி இரவு 8 மணி அளவில் வெளியே சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். பின்னர் மணிகண்டம் காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே வெள்ளிக்கிழமை சிறுமியின் வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தெற்கு பாகனூர் பகுதியில், புதர் ஒன்றில் பெண்ணொருவரின் உடல் இறந்த நிலையில் கிடந்துள்ளது. முகத்தில் துணி சுற்றப்பட்டு கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த சடலம் மாயமான சிறுமி தான் என்பதை உறுதி செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில் தெற்கு பாகனூர் பகுதியை சேர்ந்த மதி என்ற இளைஞரும், சிறுமியும் காதலித்து வந்ததும், காணாமல் போன அன்று காதலன் மதியை காண சிறுமி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து மதியை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
31ம் தேதி இரவு தன்னை சந்திக்க வந்த சிறுமியை தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த மதி, பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான். இதையடுத்து அவனை போக்சோ சட்டத்தில் கைது செய்த திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.