நாடு முழுவதும் 100 வழித்தடங்களில் தனியார் ரயில்களுக்கு அனுமதி
Published : Jan 04, 2020 8:41 AM
சென்னை - ஹவுரா, சென்னை - ஓக்லா உள்ளிட்ட 100 வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை சார்பில் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தனியார் பங்களிப்புடன் பயணிகள் ரயில் சேவை என்ற தலைப்பிலான அந்த அறிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினருடன் விவாதம் நடத்தப்பட உள்ளது.
அந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 100 வழித்தடங்கள் தனியார் ரயில்கள் இயக்கத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், சந்தை அடிப்படையிலான கட்டணத்தை வசூலிக்கும் உரிமை தனியாருக்கு அளிக்கப்படும் என்றும் இந்த ரயில்களை இயக்குவது, உள்நாட்டு நிறுவனங்களாகவோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களாகவோ இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது