மத்திய அமைச்சரவையின் குழுக்கள் யாவும் ஒருங்கிணைந்த புத்தாண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் நேற்று மாலை புதிதாக கட்டப்பட்ட குஜராத் பவன் கட்டடத்தில் நடைபெற்றது.
இன்றும் காலை 9.30 மணிக்கு இக்கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற உள்ளது. நாட்டின் பொருளாதார மந்த நிலை, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 11 மாநில அரசுகளும் பல்வேறு அமைப்புகளும் திரண்டுள்ள நிலையில், இப்பிரச்சினையை சந்திப்பது குறித்து அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு அமைச்சக இலாகாவும் இந்த ஓராண்டு ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள், அடுத்த நான்கு ஆண்டுகளில் நிறைவேற்ற திட்டமிட்டிருப்பவை குறித்த அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிக்க இக்கூட்டம் வலியுறுத்தியுள்ளது.
நேற்று நான்கு அமைச்சரவைகள் சார்பில் அறிக்கைகள் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி மோடி தலைமையிலான முழு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மோடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.