ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காஸிம் சுலைமானி, அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் மூலம் வளைகுடா நாடுகளில் இன்னமும் தனது வலிமை குறையவில்லை என்பதை அமெரிக்கா வெளிப்படுத்தி உள்ளது.
ஈரானின் குத்ஸ் படைப்பிரிவு தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் காஸிம் சுலைமானி, சிரியாவில் இருந்து ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவர் வெளியேறிய வாகனம் மீது நடந்த அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் காஸிம் சுலைமானியும் அவரோடு இருந்த சிலரும் கொல்லப்பட்டனர்.
பாக்தாதில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப், தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. . ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை தாக்க காசிம் சோலிமானி திட்டமிட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்காவின் செயலுக்கு பழிவாங்கப் போவதாக ஈரான் மிரட்டியுள்ளது.அமெரிக்க எதிர்ப்பை ஈரான் மேலும் தீவிரப்படுத்தும் என்று அதிபர் ஹஸன் ரவுஹானி கூறியுள்ளார். அமெரிக்க எதிர்ப்பு இஸ்லாமிய நாடுகள் இதற்கான பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஈரானின் புரட்சிகர படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுலைமானி விவகாரத்தை தொடர்ந்து கச்சா எண்ணைய் விலை பீப்பாய்க்கு 3 டாலர் அதிகரித்துள்ளது. ஈரான் போர் நடவடிக்கைகளை துவக்குமானால் இந்த விலை உயர்வு பல மடங்கு அதிகரிக்கும். அதே சமயம் சுலைமானியைப் போன்று இந்தப் பிராந்தியத்தில் தாக்குதல் போர் உத்திகளை வகுக்க இனிமேல் ஈரானால் இயலுமாஎன்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கொல்லப்பட்ட காஸிம் சுலைமானியின் உடல் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஈராக்கில் உள்ள அந்நாட்டு தூதுவர் தெரிவித்துள்ளார்.