​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடகு கடையில் ரூ.2.5 கோடி நகைகள் கொள்ளை.. கள்ளச்சாவி மூலம் கைவரிசை..!

Published : Jan 03, 2020 6:32 PM



அடகு கடையில் ரூ.2.5 கோடி நகைகள் கொள்ளை.. கள்ளச்சாவி மூலம் கைவரிசை..!

Jan 03, 2020 6:32 PM

புதுச்சேரியில் அடகு கடையின் பூட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி திலாஸ்பேட்டையில் ரமேஷ்குமார் ஜெயின் என்பவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் அடகு கடையை பூட்டி விட்டுச் சென்ற ரமேஷ்குமார், இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக வந்தார்.

அப்போது கடையின் வெளிப்புற இரும்பு கதவு மற்றும் ஷட்டரின் பூட்டுகள் திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்ட அவர், உள்ளேச் சென்று பார்த்த போது மொத்த நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் அல்வால் நிகழ்விடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டார். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

அடகு கடையில் மூன்று கதவுகள் உள்ள நிலையில், அதில் மொத்தம் 14 பூட்டுகள் போடப்பட்டிருந்தன. இந்த பூட்டுகளையும் லாக்கரின் மூன்று பூட்டுகளையும் உடைக்காமல் கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

போலீசாரிடம் சிக்கிவிட கூடாது என்பதற்காக கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவின் ஹார்டிஸ்க்கையும் கையோடு கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு இரண்டரை கோடி ரூபாய் என அடகு கடை உரிமையாளர் போலீசாரிடம் புகார் செய்திருக்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக ரமேஷ்குமார் அடகு கடை நடத்தி வரும் நிலையில், பூட்டுகள் உடைக்கப்படாமல் கள்ளச்சாவி மூலம் கைவரிசை காட்டப்பட்டிருப்பதால், அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.

சி.சி.டி.வி. கேமரா ஹார்டிஸ்க் திருடப்பட்டிருப்பதால், அந்த கடைக்கு அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.