இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி, இளைய விஞ்ஞானிகளின் கையில் இருப்பதாக, பிரதமர் மோடி கூறி இருக்கிறார். இந்தியாவின் சமூக பொருளாதார வளர்ச்சி, புதிய பாதையில் பயணிக்க, நவீன தொழில்நுட்பங்கள் தேவைப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் 107 ஆவது இந்திய அறிவியல் மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்கும் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய மோடி, அவர்களை கிராமப்புற வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
நவீன கண்டுபிடிப்புகள், அவற்றுக்கான சொத்துசார் உரிமை, வளத்திற்கான உற்பத்தி ஆகியவற்றை இந்தியாவின் இளைய விஞ்ஞானிகளிடம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
மத்திய அரசின் முக்கியத் திட்டங்களான தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் போன்றவை, உலக அளவில் பாராட்டப்படுவதற்கு, அவற்றில் புகுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமும் முக்கிய காரணம் என்றார் மோடி.
இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கும், கிராமப்புற பொருளாதாரம், சிறு குறு நடுத்தர தொழில் வளத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக மோடி குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து மாற்று எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கான தேவையை மோடி வலியுறுத்தினார். இதற்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆராயுமாறு விஞ்ஞானிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையேயான பாலமாக அறிவியல் தொழில்நுட்பம் இருக்க வேண்டும் என்றார் அவர்.