தமிழ்நாட்டில், பல மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் முழுவதுமாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரையில் வாக்கு எண்ணிக்கை 100 சதவிகிதம் நிறைவடைந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், 23 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக 12இல் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மொத்தமுள்ள 212 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கான தேர்தலில் அதிமுக94 இடங்களில் வென்றுள்ளது. திமுக 92 இடங்களில் வென்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 ஒன்றியங்களுக்கு நடந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமுள்ள 10 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் 8 இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. திமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
98 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் அதிமுக கூட்டணி 55-இலும், திமுக கூட்டணி 41 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. மீதமுள்ள இரு இடங்களில் சுயேட்சை வெற்றிபெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 34 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணி 23 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக கூட்டணி,10 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. செங்கம் பகுதி மாவட்ட கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 341 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களை பொருத்தவரை, திமுக கூட்டணி 141 இடங்களிலும், அதிமுக கூட்டணி 137 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கான தேர்தலில், திமுக கூட்டணி 5 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் மட்டும் வென்றுள்ளது. 59 ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில், திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அதிமுக 16 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.