வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்என்று உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முடிவுகளை உடனடியாக அறிவிக்க கோரி திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தனி நீதிபதி சத்தியநாராயணன் முன்பு இரவு 10.15 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சில வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரம் இல்லாத நபர்கள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர் என்றும், அவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிடுமாறும், திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் தமது வாதத்தில் வலியுறுத்தினார்.
பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்றும் திமுக முன்னணி வகித்த இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் திமுக தரப்பில் வாதிடப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரேசன், முடிவுகள் முறைப்படி அறிவிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார். வாக்கு எண்ணும் நடைமுறைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படுவதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்றும், தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்தியநாராயணன், வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுகிறது என்ற தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.