தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில சுவாரஷ்யமான முடிவுகளும் வெளியாகி இருக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டி நாயக்கன்தொட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் கல்லூரி மாணவி சந்தியாராணி வெற்றி பெற்றுள்ளார். பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் 21 வயதான சந்தியா நிலையில், 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருப்பூர் அய்யம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி தேர்தலில் அய்யப்பன், பொன்னுசாமி ஆகிய இரு வேட்பாளர்களும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க அவர்கள் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, வேட்பாளர் அங்கப்பன் வெற்றி பெற்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தரக்குடி ஊராட்சி மன்ற தலைவராக தங்கவேலு என்ற 73 வயது மூதாட்டி வெற்றி பெற்றார்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 79 வயதான மூதாட்டி வீரம்மாள் வாகை சூடினார். 2 முறை தோல்வியை தழுவிய நிலையில் 3-வது முறையில் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றார்.
திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் ஸ்ரீதர் 1307 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வீழ்த்தினார்.
நாமக்கல் மாவட்டம் நடுகோம்பை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் மகன் யுவராஜ் தோல்வி அடைந்தார்.
விருதுநகர் அருகே, தனது அரசு துப்புரவு பணியாளர் பணியை ராஜினாமா செய்துவிட்டு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பெண் ஒருவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணி செய்துவந்தவர் சரஸ்வதி. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தனது பதவியை துறந்த அவர், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். 1113 வாக்குகள் பெற்ற அவர், 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
நாகை மாவட்டத்தில் 22 வயதே ஆன பட்டதாரி இளம்பெண் ஒருவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ளார். எம்சிஏ பட்டப்படிப்பை முடித்துள்ள அனுசியா என்ற அவர், மற்ற பணிக்கு செல்வதை விட தேர்தல் நின்று மக்கள் பணி ஆற்றவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்துள்ளார். அந்த வகையில், பாலையூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு திமுக சார்பாக போட்டியிட்ட அனுசியா, 380 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
கமுதியில் கணவன், மனைவி வெற்றி: கமுதி 10வது வார்டு மாவட்ட கவுன்சிலராக கணவன் வாசுதேவன் (திமுக) வெற்றி, மறக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக வாசுதேவனின் மனைவி லட்சுமி வெற்றி