ஒடிசாவில் தன்னைச் சீண்டிய இளைஞனை காட்டு யானை ஒன்று விரட்டி விரட்டி ஓடவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
மயூர்பஞ்ச் என்ற இடத்தில் விளைநிலத்தில் புகுந்த ஆண்டு காட்டு யானையை அங்கிருந்த கிராமத்தினர் விரட்டினர். கிராம மக்களின் சப்தத்தினால் மிரண்ட யானை அங்கிருந்து மெதுவாகச் சென்றது. அப்போது இளைஞன் ஒருவன் தான் வைத்திருந்த குச்சியால் யானையை அடித்து விரட்டினான்.
இதனால் கோபமடைந்த யானை பின்னால் திரும்பி அந்த இளைஞனை ஓட ஓட விரட்டியடித்தது. யானையின் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த இளைஞன் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது. இதையடுத்து யானைகள் ஊருக்குள் வந்தால் தங்களிடம் தகவல் தெரிவிக்குமாறு ஒடிசா மாநில வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் மக்கள் தாங்களாகவே யானையை விரட்டினால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொள்ளநேரிடும் என்றும் வனத்துறை எச்சரித்துள்ளது.