ரயில்வேயில் இத்தனை அம்சங்களா.....! பார்வையாளர்களுக்கான பயனுள்ள கண்காட்சி
Published : Jan 02, 2020 7:09 AM
ரயில்வேயில் இத்தனை அம்சங்களா.....! பார்வையாளர்களுக்கான பயனுள்ள கண்காட்சி
Jan 02, 2020 7:09 AM
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலாப் பொருட்காட்சியில் தெற்கு ரயில்வே சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் உள்ள வசதிகள், அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து துறை சார்ந்தவர்கள் விரிவான விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
சென்னை தீவுத்திடலில் 46வது சுற்றுலாப் பொருட்காட்சி கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசின் அனைத்துத் துறைகள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், ரயில்களின் இயக்கம், அதிலுள்ள பயணிகளுக்கான வசதிகள், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்த தத்ரூப மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள ஊழியர்கள் அவற்றை காண வரும் பார்வையாளர்களுக்கு விரிவான விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
ரயில் கழிவறைகளில் இருந்து வெளியேற்றப்படும் மனிதக் கழிவுகள் நேரடியாக தண்டவாளத்தை சென்றடைந்து சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வந்தன. இதற்கான தீர்வாக அறிமுகம் செய்யப்பட்ட “பையோ டைஜஸ்டர் டேங்க்” வசதி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.
ரயில் கழிவறைகளுடன் பொருத்தப்படும் இந்த பையோ டைஜஸ்ட டேங்க்கில் மனிதக் கழிவுகளை சுத்திகரிக்கும் பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அந்தக் கழிவுகளை மட்கச் செய்து நிறமில்லாத, மணமில்லாத, சுற்றுச்சூழலை பாதிக்காத வாயுவாக வெளியேற்றும்.
கழிவறை பேசினுக்குள் பிளாஸ்டிக் பாட்டில்கள், குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை போடாமல், முறையாக பயன்படுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதைப் போன்றே ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை கண்ட இடங்களில் வீசுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டினைத் தவிர்க்க, ரயில்நிலையங்கள் தோறும் வைக்கப்பட்டுள்ள “கிரஷர்” இயந்திரங்கள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஆளில்லா ரயில்வே கிராசிங்குளில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை ஒலிப்பெருக்கிள் குறித்தான விளக்கங்களும் அரங்கில் வைக்கப்பட்டிருந்தன.