​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்று காலை ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Published : Jan 02, 2020 6:40 AM

இன்று காலை ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Jan 02, 2020 6:40 AM

தமிழகத்தில் 2 கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்கு எண்ணிக்கையை, வாக்கு எண்ணும் மையங்களில் 30,000  போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

தமிழகத்தில் 10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும், 315 வாக்கு எண்ணும் மையங்களில், வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு அறை திறக்கப்படும். இதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு முதலில் கொண்டு செல்லப்படும்.

தேர்தலில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்து உள்ளனர் என்பதால் முதலில் ஓட்டு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள மேஜைகளில் வாக்குச்சீட்டுகள் கொட்டப்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒவ்வொரு ஊராட்சியாக முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டு மொத்தமாக கொட்டப்படும்.

பிறகு பதிவான 4 வண்ண ஓட்டு சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்படும். ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு பதிவான வாக்குகளை தனித்தனியாக பிரிப்பார்கள். அதன் பின்பு 50 எண்ணிக்கையாக கட்டப்படுகிறது.

இதனையடுத்து ஓட்டு சீட்டுகள் தனிதனி அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படும். ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் என்று 4 வகையான வாக்குச்சீட்டும் நான்கு தனித்தனி அறைகளில் எண்ணப்படும். இதற்காக குறைந்த பட்சம் 6 முதல் அதிக பட்சமாக 12 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதன்படி பார்த்தால் வாக்குகளை பிரித்து எண்ண ஆரம்பிப்பதற்கு குறைந்தது சுமார் 2 மணி நேரம் ஆகும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 வாக்கு எண்ணுபவர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.

ஒவ்வொரு சுற்றுவாரியாக வாக்கு எண்ணும் பணி நடக்கும். ஒவ்வொரு சுற்றும் முடிந்த பின்னரும் படிப்படியாக வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் ஊராட்சி மற்றும் ஒன்றிய வேட்பாளரும் அவருடன் 3 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்டக்குழு உறுப்பினருக்கான வேட்பாளர் மற்றும் 5 முகவர்கள் அனுமதிக்கப்படுவர்.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு அறையிலும் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி பதிவு செய்யப்படுகிறது. பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அந்த வீடியோ காட்சிகள் பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு ஊராட்சியாக எண்ணப்பட்டு ஒலிபெருக்கி மூலம் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை நள்ளிரவு 12 மணிக்கு வரை நடக்கலாம் அல்லது நாளை அதிகாலை வரை நடக்கலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.