ஓடும் ரயிலில் இருந்து கணவனை தள்ளிய அஸ்வினி..! குரங்கு காதல் திகில்
Published : Jan 01, 2020 9:49 PM
ஓடும் ரயிலில் இருந்து கணவனை தள்ளிய அஸ்வினி..! குரங்கு காதல் திகில்
Jan 01, 2020 9:49 PM
சென்னை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தனது கணவனை தள்ளி கொலை செய்ய குரங்கு காதல் கூட்டாளிகளை ஏவிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடியை சேர்ந்த மெக்கானிக் ராஜேந்திரன் என்பவர் கடந்த 29 ந்தேதி சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயிலில் இருந்து அரக்கோணம் அருகே தவறி விழுந்து விட்டதாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார்.
அவரிடம் ரெயில்வே போலீசார நடத்திய விசாரணையில், தான் தவறி விழவில்லை என்றும் கைகுட்டையால் முகத்தை மறைத்து கட்டி யிருந்த 3 பேர் தன்னை பிடித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனது மனைவியின் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதையடுத்து ராஜேந்திரனின் மனைவி அஸ்வினியை பிடித்து விசாரித்த போது குரங்கு காதல் கொலை திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. குரங்குகள் எப்படி மரம் விட்டு மரம் தாவுகின்றதோ அது போல அஸ்வினி தாலி கட்டிய கணவன் இருக்கும் போது அவனை விட்டு பக்கத்து ஏரியாவை சேர்ந்த அனுராக் என்பவர் மீது காதல் கொண்டதாக கூறபடுகின்றது.
இந்த குரங்கு காதல் சமாச்சாரம் கணவன் ராஜேந்திரனுக்கு தெரியவர இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காதலனுடன் செல்போனில் மணி கணக்கில் பேசிவந்ததையும் ராஜேந்திரன் கண்டித்துள்ளார். இதனால் ராஜேந்திரனை கொலை செய்யும் படி காதலன் அனுராக்கை ஏவியுள்ளார் அஸ்வினி. தங்கள் மீது கொலை வழக்கு வராமல், ராஜேந்திரனின் மரணம் விபத்து போல் இருக்க வேண்டும் என்பதற்காக அவனை பின் தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே தனது மனைவி திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக சாமியிடம் வேண்டிக் கொண்ட ராஜேந்திரன் திருத்தனி முருகன் கோவிலுக்கு செல்வதாக அஸ்வினியிடம் கூறிச்சென்றுள்ளார்.
உடனடியாக செல்போன் மூலம் தனது கணவர் ரெயிலில் திருத்தணி செல்லும் தகவலை அனுராக்கிற்கு தெரிவிக்க அவர் ஓசி மதுவுக்காக தன்னுடன் சுற்றும் இருவரை அழைத்துச்சென்று ராஜேந்திரனை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி விட்டு போலீசில் சிக்கிக் கொண்டனர் என்கின்றனர் காவல்துறையினர்.
இதையடுத்து அஸ்வினி, குரங்கு காதலன் அனுராக், மற்றும் கூட்டாளிகள் கமலேஸ்வரன், தினேஷ் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதே நேரத்தில் ரெயிலில் இருந்து தள்ளி விட்ட போது ரெயிலின் வேகம் குறைந்ததால் ராஜேந்திரன் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
டிக்டாக் அபிராமியின் பிரியாணி காதலால் இரு குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில் அஸ்வினியின் குரங்கு காதல், அவரது கணவரை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி விட்டிருப்பதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்தனைக்கும் ஆசைப்படு என்ற எண்ணத்துடன் மனம் விட்டு மனம் தாவி குரங்கு காதல் செய்யும் பெண்கள் மற்றும் ஆண்கள் இறுதியில் ஜெயிலில் கம்பி எண்ண வேண்டி வரும் என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி..!