புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறிய 700 பேர் மீது வழக்கு பதிவு
Published : Jan 01, 2020 8:43 PM
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறிய 700 பேர் மீது வழக்கு பதிவு
Jan 01, 2020 8:43 PM
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,சென்னையில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டதால் குற்றங்கள் குறைந்துள்ளது என்றார். இதுகுறித்த புள்ளி விவரங்களையும் அவர் வெளியிட்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் சென்னையில் சி.சி.டி.வி பொருத்த ஆரம்பித்து 2019 இல் அதன் பயனை பெற ஆரம்பித்துள்ளதாக கூறினார்.
2107 ஆம் ஆண்டு செயின்பறிப்பு சம்பவங்கள் 615 ஆக இருந்தது 2019ல் 307 ஆக குறைந்துள்ளது என்றார். ஆதாய கொலை உள்ளிட்ட குற்றங்களும் கடந்த 2017ம் ஆண்டை விட 50 விழுக்காடு குறைந்துள்ளதாக கூறிய அவர், குற்றநடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வெளிமாநில கொள்ளையர்களை அடையாளம் கண்டு நடைவடிக்கை எடுத்துள்ளோம் என்றார். இவை அனைத்தும் சிசிடிவி பொருத்தியதால் கிடைத்த பலன் என்றார்.
மேலும் நிர்பயா திட்டத்தின் மூலம் 113 கோடி செலவில் 6 ஆயிரம் நவீன கேமராக்கள் சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டை விட 2019ல் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.
போக்குவரத்து விபத்து ஏற்படுத்தியதாக கடந்த 2018ம் ஆண்டு 7794 வழக்குகள்பதிவு செய்யப்பட்டது என்றும் 2019ம் ஆண்டு விபத்துகள் எண்ணிக்கை 6871 ஆக குறைந்துள்ளது என்றார்.
காவல்துறையினரின் தொடர் முயற்சியால், காவலன் செயலி பதிவிறக்கம் கடந்த ஒன்றரை மாதத்தில் 4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்ந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். போக்சோவில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் 21 பேருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆணையர் விஸ்வநாதன், அது குறித்து ஆலோசிக்கப்பட்டு திட்டம் வகுக்கப்படும் என்றும், வாகன ஓட்டிகள் ஒழுங்கை கடைப்பிடித்தாலே பெருமளவு நெரிசல் குறையும் என்றும் கூறினார்.