தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் செம்மஞ்சேரியில் 4 செ.மீட்டரும், கொளப்பாக்கத்தில் 3 செ.மீட்டரும், மீனம்பாக்கத்தில் 3 செ.மீட்டரும், செங்கற்பட்டில் 2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என்றார்.
தமிழகத்தின் வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு நிலவுவதாகவும், இதனால் வருகிற 5-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் பாலசந்திரன் குறிப்பிட்டார். சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.