2020 புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர்- பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், அமைதியான, அக்கறையான, கருணையான சமுதாயத்தை உருவாக்க புத்தாண்டில் உறுதி எடுத்துக் கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். வலிமையான, வளமையான இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பிப்பதற்கு இதுவே தக்க தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாற்ற முடியாது என்று நினைத்திருந்த விஷயங்களை 2019ம் ஆண்டில் மாற்றி சாதித்துக் காட்டியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு, இந்தியாவை மாற்றி அமைக்கவும், 130 கோடி இந்தியர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் முயற்சிகள் தொடரும் என்று கூறியுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும் என வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழகத்தை படைத்திட புத்தாண்டில் உறுதியெற்பொம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு புதிய ஆண்டும் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் அள்ளி வழங்கும் இறைவனின் கொடையாக மலர்வதாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பிறக்கும் புத்தாண்டு, புதிய ஒளியைக் கூட்டட்டும், புதிய சிந்தனையைத் தரட்டும், புத்துணர்வு ஏற்படுத்தட்டும், புதுவாழ்வு மலரட்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.