குடியுரிமை திருத்த சட்டத்தை சில மாநிலங்கள் எதிர்ப்பதால், இணையதள நடைமுறையை அமல்படுத்தி குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அறிவித்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சக அதிகாரி, பாதுகாப்பு, வெளியுறவு, ரெயில்வே, குடியுரிமை உள்ளிட்டவை மத்திய பட்டியலில் இருப்பதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசின் பட்டியலில் உள்ள மத்திய சட்டத்தை அமல்படுத்துவற்கு மறுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். குடியுரிமை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக புதிய அதிகாரியை நியமிக்க பரிசீலித்து வருவதாக அந்த அதிகாரி கூறினார்.
விண்ணப்ப நடைமுறை, ஆவணங்கள் பரிசீலனை, குடியுரிமை வழங்குதல் என ஒட்டுமொத்த நடைமுறையையும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ள யோசித்து வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.