​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுராந்தகம் மருத்துவ ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால் விவசாய நிலங்கள் முற்றிலுமாக அழிந்து நாசம்

Published : Mar 15, 2019 9:13 AM

மதுராந்தகம் மருத்துவ ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால் விவசாய நிலங்கள் முற்றிலுமாக அழிந்து நாசம்

Mar 15, 2019 9:13 AM

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மருத்துவ ஆலையின் ரசாயன  கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சாத்தமை கிராமத்தில் சன் பார்மா கெமிக்கல் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் மாத்திரை தயாரிக்க பயன்படுத்தும் மருந்துகள் பவுடராக தயார் செய்து பல்வேறு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு மாத்திரைகளாக தயார் செய்யப்படுகின்றன.

இந்த மாத்திரை பவுடர் தயார் செய்யப்படும் சன் பார்மா கெமிக்கல் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவு நீரை வெயில் காலங்களில் ஆலைக்குள்ளேயே பள்ளத்தில் தேக்கி வைத்து மழைக்காலத்தின் போது மழைநீருடன் வெளியேற்றுகின்றனர். இப்படி வெளியேறுவதாலும் நிலத்தடியில் கழிவு நீரை தேக்கி வைப்பதாலும் இப்பகுதியில் சுற்றி உள்ள புழுதிவாக்கம், அண்டவாக்கம், மலைப்பாளையம் போன்ற சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

இதுபோல கிணற்று நீர் மற்றும் இங்குள்ள மதுராந்தகம் ஏரி, மலைப்பாளையம் ஏரி, வேடந்தாங்கல் ஏரி, புழுதிவாக்கம் ஏரி போன்றவற்றிலும் ஆலை கழிவுநீர் கலந்து மாசடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக ஏற்படும் துர்நாற்றம் மழைக்காலங்களில் அதிகளவில் உள்ளதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் மண்வளமும் கெட்டு போய்விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏரிகளில் ஆலையின் ரசாயனக் கழிவுநீர் கலப்பதன் காரணமாக  வேடந்தாங்கல் ஏரிக்கு வரும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரை இல்லாததால் தற்போது பறவைகளின் வருகை எண்ணிக்கை  குறைந்துள்ளதை காண முடிகிறது. நிலத்தடி நீர் மாசு காரணமாக குடிநீருக்காக கேன் தண்ணீரை வாங்கி குடிக்கும் நிலை உருவாகி இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலமுறை அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இப்பகுதி மக்களின் குமுறலாகும். இந்த பிரச்சனையை தீர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு..