​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போயிங் நிறுவன பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு சரிவு

Published : Mar 12, 2019 1:35 PM

போயிங் நிறுவன பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு சரிவு

Mar 12, 2019 1:35 PM

போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் 8 (Boeing 737 MAX 8) விமானங்களில் வடிவமைப்பு மாற்றங்களை ஏப்ரலுக்குள் செய்துமுடிப்பதை அமெரிக்க அரசு கட்டாயமாக்க உள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் போயிங் 737 மேக்ஸ் 8 மாடல் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல, எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 மாடல் ஜெட் விமானம் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர்.

இந்த இரு விபத்துகளுக்கும் இதுவரை  காரணம் கண்டறியப்படாத நிலையில், போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 737 மேக்ஸ் 8 மாடல் விமானங்களில் ஏதேனும் கோளாறு இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விமானங்களை சீன விமான நிறுவனங்கள் மறுஉத்தரவு வரும் வரை இயக்கக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. மேலும் சில நாட்டு விமான நிறுவனங்களும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகக் கூறியிருந்தன.

இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகமும் போயிங் 737 மேக்ஸ் 8 மாடல் தொடர்பான விவரங்களை திரட்ட உள்ளதாக தகவல் வெளியானது.

குறுகிய கால இடைவெளியில் 737 மேக்ஸ் 8 மாடல் விமானங்கள் 2 விபத்தில் சிக்கிய நிலையில், போயிங் நிறுவன பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

இந்நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 மாடல் விமானங்களில் சாஃப்ட்வேர் மேம்பாடுகளை செய்ய இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான 737 மேக்ஸ் விமானங்களை, மேலும் பாதுகாப்பானதாக மாற்ற, அந்த விமானங்களுக்கான கட்டுப்பாட்டு மென்பொருளை பல மாதங்களாக மேம்படுத்தி வருவதையும் போயிங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மாற்றங்களை ஏப்பலுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதை அமெரிக்க அரசு கட்டாயமாக்க உள்ளது. போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.