​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெங்களூரில் நடைபெற்ற ஏரோஇந்தியா ஷோ நிகழ்ச்சி மைதானத்தில், கார் பார்க்கிங் பகுதியில் தீ விபத்து 300-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரை

Published : Feb 23, 2019 2:25 PM

பெங்களூரில் நடைபெற்ற ஏரோஇந்தியா ஷோ நிகழ்ச்சி மைதானத்தில், கார் பார்க்கிங் பகுதியில் தீ விபத்து 300-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரை

Feb 23, 2019 2:25 PM

பெங்களூரில் நடைபெற்ற ஏரோஇந்தியா ஷோ நிகழ்ச்சி மைதானத்தில், கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட கார்கள்  தீக்கிரையாகின. 

பெங்களூரில் இந்த ஆண்டு ஏரோஇந்தியா ஷோ தொடங்கும் முன்பே, பயிற்சி ஒத்திகையின் போது இரு விமானங்கள் மோதிக் கொண்டதில் ஒரு விமானி உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஏரோஇந்தியா ஷோவில் அவரது நினைவாக அவர் பறக்க வேண்டிய இடம் காலியாக விடப்பட்டு முழுமை பெறாத வடிவங்களின் தோற்றங்களை வானில் வெளிப்படுத்தினர். விமானப் படை வீரர்கள், வீராங்கனைகளின் பல்வேறு வான் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதனிடையே பிற்பகலில், கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வறண்டுகிடந்த புற்களில் பற்றிய தீ மளமளவென அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்களின் மீது பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களின் காருடைய நிலையை அறிய குவிந்தனர். அவர்களை தீப்பற்றி எரியும் இடத்துக்கு அருகே நெருங்க விடாமல் போலீசார் தடுத்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. ஆனால், அதற்குள் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகிவிட்டன.

image

இந்த தீ விபத்தால் யாருக்கும் காயமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஏரோ ஷோ நிகழ்ச்சி இந்த தீ விபத்து காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே அணைக்கப்படாத சிகரெட்டை காய்ந்த புல் தரையில் யாரேனும் வீசியதால் தீவிபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மணி நேர போராட்டத்துக்குப் பின் 33 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விபத்துக்கான உரிய காரணத்தை அறிய தடயவியல் வல்லுநர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நின்றிருந்த நிலையில், தீவிபத்தால் அவற்றுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. 

இதனிடையே, ஒரு சில வாகன காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தீவிபத்து ஏற்பட்ட இடத்துக்கு வந்து வாகன உரிமையாளர்களிடம் அவர்களுடைய வாகன எண்களை சேகரித்து பட்டியல் தயாரித்து வருகிறது. ஒரு சில காப்பீட்டு நிறுவனங்கள் சரிவர பதிலளிக்கவில்லை என வாகனத்தைப் பறிகொடுத்த உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆசையோடு வாங்கிய கார் எரிந்து வெறும் கூடாக நிற்பதைக் கண்டு உரிமையாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் கண்ணீர் வடித்தனர். வாகன ஆவணங்கள் எரிந்து போனாலும், நகல்கள் வழங்கப்படும் என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.