​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு விவகாரம் - மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டிப்பு

Published : Feb 15, 2019 7:25 PM

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு விவகாரம் - மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டிப்பு

Feb 15, 2019 7:25 PM

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு விவகாரத்தில், மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்திற்கு பெருமை என்றால் இந்தியாவிற்கும் பெருமைதானே என அறிவுறுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாய்வு நடத்தவும், சிவகளைபரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தவும், தொல்லியல்துறைக்கு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டை மத்திய தொல்லியல்துறை புறக்கணிக்கிறது என்றார். குஜராத்தில் அகழ்வாய்வு மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, அவ்வாறு, தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கவில்லை என்றார்.

அப்போது, ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அகழ்வாய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அறிக்கை தாக்கல் செய்வதில் மத்திய அரசு ஆர்வமாக இல்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு அகழ்வாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்க பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலும் தொல்லியல் அலுவலர் சத்தியமூர்த்தி தயாராக இருந்தபோதும், அவருக்கு மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களின் வயதை கண்டறியும் சோதனைக்காக, அமெரிக்காவின் புளோரிடாவுக்கு அவை அனுப்பப்படவில்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இவற்றை பார்க்கும் போது தமிழ்நாட்டின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் இல்லாமல் இருப்பது தெரிகிறது என்றும் நீதிபதிகள் கூறினர். தமிழ்நாட்டிற்கு பெருமை என்றால், அது இந்தியாவையும் சாரும்தானே என்று தெரிவித்த நீதிபதிகள், மத்திய தொல்லியல் துறையின் தாமத நடவடிக்கைகள் கண்டிக்கதக்கது என்றனர்.

இதனைத் தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர், இதுதொடர்பாக, தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கப்படும் என்றார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை, வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.