​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே அதுகுறித்து அனில் அம்பானிக்கு மோடி தெரிவித்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Published : Feb 12, 2019 2:14 PM

ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே அதுகுறித்து அனில் அம்பானிக்கு மோடி தெரிவித்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Feb 12, 2019 2:14 PM

ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே அதுகுறித்து அனில் அம்பானிக்கு மோடி தெரிவித்ததாக குற்றம்சாட்டியுள்ள ராகுல்காந்தி, பிரதமர் மீது ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மின்னஞ்சல் ஒன்றை ஆதாரமாகக் காட்டி, ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே, அனில் அம்பானி பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்ததாக குறிப்பிட்டார்.

அப்போது, பிரதமர் மோடி பிரான்ஸ் வந்து சென்ற பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை எதிர்நோக்கியிருப்பதாக அனில் அம்பானி, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரிடம் கூறியதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி மட்டுமே இதுபற்றி அறிந்தவர் எனும் நிலையில், அனில் அம்பானியின் இடைத்தரகர் போல பிரதமர் மோடி செயல்பட்டிருப்பதாக ராகுல்காந்தி சாடினார்.

இது ரகசிய காப்பு சட்டத்தை மீறிய செயல் என்றும் ராகுல்காந்தி கூறினார். பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகே அனில் அம்பானி தனது நிறுவனத்தை தொடங்கியதாகவும் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கோ வெளியுறவு செயலருக்கோ கூட தெரியாத ஒரு விஷயம், அனில் அம்பானிக்கு தெரிந்தது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் சமரசம் செய்து கொண்டிருப்பதாகவும், அவர் ஒரு உளவாளி போல நடந்துகொண்டிருப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான விவரங்களை அனில் அம்பானிக்கு வெளிப்படுத்தியதற்காக, பிரதமர் மீது ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக காங்கிரஸ் வழக்கு ஏதேனும் பதிவு செய்யுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த விவகாரத்தில் மக்கள் மன்றத்தையே அணுகப்போவதாகவும், அவர்களே தீர்ப்பளிக்கட்டும் என்றும் ராகுல்காந்தி பதிலளித்தார்.

இதனிடையே ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது. ராகுல்காந்தி குறிப்பிட்ட உரையாடல் குறித்த மின்னஞ்சல்,  ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பானது அல்ல என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.

சிவில் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கான ஹெலிகாப்டர்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிப்பது தொடர்பாக ஏர்பஸ் நிறுவனத்துக்கும், ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் அது என்று கூறப்பட்டுள்ளது.

36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் - இந்தியா அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் ரபேல் ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி கையெழுத்தானதாகவும், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லா டிரியனையும் (Jean-Yves Le Drian), அவரது ஆலோசகர்களையும் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனில் அம்பானி சந்தித்ததாக செய்திகள் வெளியானது. இந்த சந்திப்பு குறித்து லா டிரியனின் தொழில்துறை ஆலோசகர் கிறிஸ்டோப் சாலமன் Christophe Salomon உயரதிகாரிக்கு விளக்கிய விவரங்கள் வெளியானதன் மூலமே ரஃபேல் விவகாரத்தில் புதிய குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.