​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்த ஆண்டு இறுதியில், 100 சதவிகித வீடுகள் மின் இணைப்பை பெற்றுவிடும் - பிரதமர் மோடி

Published : Feb 11, 2019 5:30 PM

இந்த ஆண்டு இறுதியில், 100 சதவிகித வீடுகள் மின் இணைப்பை பெற்றுவிடும் - பிரதமர் மோடி

Feb 11, 2019 5:30 PM

உலகில் இன்னமும் 100 கோடி பேர் மின்சார பயன்பாட்டை பெற்றிராத நிலையில், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 100 சதவிகித வீடுகள் மின் இணைப்பை பெற்றுவிடும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

டெல்லியை அடுத்து கிரேட்டர் நொய்டாவில் எரிசக்தி துறை சார்பில் பெட்ரோ டெக் என்ற மூன்று நாட்கள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, சமூக பொருளாதார வளர்ச்சிக்கு எரி சக்தி துறை முக்கிய பங்காற்றுகிறது என்றார்.

நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர எரிசக்தி துறையில் சரியான விலை, நிலையான வினியோகம் ஆகியவை இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

உலகில் எரிசக்தி நுகர்வு முன்பு மேற்கத்திய நாடுகளில் அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி, இப்போது கீழ்திசை நாடுகள் இந்த இடத்தை பிடித்துள்ளன என்றார்.

எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்க்கு சரியான விலை நிர்ணயித்தால் மட்டுமே உற்பத்தியாளரும், உபயோகிப்பாளரும் பயன்பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கடமை சர்வதேச நாடுகளுக்கு உள்ளதை சுட்டிக்காட்டிய மோடி, இந்த கடமையை இந்தியா மிகசரியாக செய்து வருகிறது என்றார். வாகனங்களுக்கான தரக்கட்டுப்பாட்டில் பி.எஸ்.4 -ல் இருந்து நேரடியாக பி.எஸ்.6-க்கு இந்தியா செல்ல உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எரிசக்தி துறையில் உலகம் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ள நிலையிலும், உலகம் முழுவதும் 100 கோடி பேர் இன்னமும் மின்சாரம் இன்றியும், எரிவாயு இன்றியும் உள்ளதாக மோடி கூறினார். ஆனால் இந்தியாவில் அனைவருக்குமான எரிசக்தி என்பதில் அரசு தீவிரமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.இந்தாண்டு இறுதிக்குள் 100 சதவிகித வீடுகளும் மின் இணைப்பை பெற்று விடும் என்று அவர் கூறினார்.

இந்தியாவில் எரிவாயு இணைப்பை அனைத்து வீடுகளுக்கும் வழங்குவதற்கான நீலச்சுடர் புரட்சி நடைபெற்று வருவதாக கூறிய மோடி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 55 சதவிகிதமாக இருந்து எரிவாயு இணைப்பு பெற்றோர் எண்ணிக்கை இப்போது 90 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றார்.

தற்போது உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா வருகிற 2030-ஆம் ஆண்டில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயரும் என்று பிரதமர் மோடி, கூறினார்.

இந்தியாவில் இப்போது 16,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, மேலும் 11,000 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் முடிவடையும் போது, நாட்டின் 70 சதவிகித வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம் நடைபெறும் என்றார்.

இந்திய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீட்டுக்கு உகந்த நிலை உள்ளதை விளக்க நடைபெறும் மூன்று நாட்கள் கருத்தரங்கில் 95 நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் 70 நாடுகளைச் சேர்ந்த 7000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள கருத்தரங்கை ஒட்டி, 20,000 சதுர மீட்டரில் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.