​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

Published : Jan 23, 2019 12:26 PM

ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

Jan 23, 2019 12:26 PM

ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 11 ஆயிரத்து 250 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் ஊழியர்கள் வராததால் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. புதிய குடும்ப அட்டை பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், பட்டா மாறுதல், வருமான வரிச் சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று உள்ளிட்ட சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 6734 ஆசிரியர்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பயிற்சி பள்ளி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் போராட்டத்தில் பங்கேற்கவில்லை

திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாகவும் பணிக்கு வரததால் முக்கிய சேவைகளை பெற முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் வராத காரணத்தால் துப்புரவு பணியாளர்கள் குழந்தைகளை கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் வராததால் துப்புரவு பணியாளர்கள் குழந்தைகளை கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் 1410 அரசு பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 9500 ஆசிரியர்களில் 6400க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். தனியார் பள்ளி மற்றும் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும் நிலையில் பல பள்ளிகளில் மாணவர்களும் வரவில்லை. இதே போன்று 7 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிக்கு வராததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஜேக்டோ- ஜியோ அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து பேருந்துகள் மூலம் அழைத்துச் சென்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சதுமுகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திறக்கப்படாததால் மாணவர்கள் காலை 11 மணி வரை காத்திருந்தனர். அதைத் தொடர்ந்து பள்ளி வளாகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஆசிரியர்களை வரவழைத்து பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மட்டும் வந்துள்ளனர். ஆண்டு இறுதித் தேர்வு நெருங்க உள்ள நிலையில் போராட்டம் தொடர்ந்தால் தேர்வை எதிர் கொள்வது கடினமாக இருக்கும் என மாணவர்கள் கவலை தெரிவித்தனர். 

கடலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தால் மாவட்டத்தில் 1200  அரசு பள்ளிகள் இயங்கவில்லை. அரசு அலுவலகங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் ஜாக்டோ ஜியோ போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டசிலர் போராட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செல்ஃபி எடுப்பதிலேயே கவனமாக இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்ற போது ஒரு பிரிவினர் வேனில் ஏற அடம் பிடித்தனர.் இதையடுத்து நிர்வாகிகள் வந்து அவர்களை அழைத்து சென்றனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை முன்பு   நடைபெற்ற சாலை மறியல்  போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

தேனி - கம்பம் சாலையில் பேரணியாகச் சென்று நேரு சிலை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.