​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம்

Published : Jan 12, 2019 11:00 AM

தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம்

Jan 12, 2019 11:00 AM

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொத்தேரி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநில மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

அவர்களுடன் தென்கொரியாவில் உள்ள ஹன்னம் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளும், சிக்கிமில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளும் இணைந்து சமத்துவப் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவ, மாணவிகளின் நடனத்தை, அங்கிருந்த சக மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உற்சாகமாக கண்டுரசித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இயங்கி வரும் பெஸ்ட் தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தனியார் கல்லூரி வளாகத்தில் வயல்வெளிக்கு அருகே மாதிரி கிராமம் அமைத்து நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பொங்கல் பொங்கியபோது குலவையிட்டு உற்சாகமூட்டிய பெண்கள், பின்னர் கும்மியடித்தும் நடனமாடினர். அத்துடன் மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கரகாட்டம் ஆகிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் ஏராளமான மாணவ, மாணவிகளின் திரைப்பட பாடல்களுக்கு உற்சாக நடனமாடினர்.

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து மேளதாளத்தோடு பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். உறியடித்தல், சைக்கிள் டயர் ஓட்டுதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளை, சக மாணவிகள் உற்சாகப்படுத்தினர்.

விழாவில் பங்கேற்ற மாணவிகள், கல்லூரி வளாகத்திற்கு கொண்டுவரப்பட்ட ராட்டினங்களிலும் விளையாடி மகிழ்ந்தனர்.

சென்னை பூந்தமல்லியில் அரபிந்தோ பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், ஏராளமான மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்த அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகியவற்றிலும் பங்கேற்றனர்.

கோவை எஸ்.என்.ஆர். கலைக் கல்லூரியில் பொங்கல் விழா களைகட்டியது. மாணவ - மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் உள்ள பான்செக்கார்ஸ் மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடையணிந்து, பொங்கலிட்ட மாணவிகள், கும்மியடித்தும் நடனமாடினர். அதைத் தொடர்ந்து மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் மிக உற்சாகமாக நடைபெற்றது.

சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளியில் நெகிழிகளை தவிர்ப்பதை வலியுறுத்தி சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்ற பொங்கல் விழாவில், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே ஒத்தக்குதிரை பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க சாலையில் நடனமாடியபடி, கல்லூரி வளாகத்திற்கு மாணவ, மாணவிகள் வந்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்ட அவர்கள், அங்கும் பல்வேறு குழுக்களாக பிரிந்து, உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் அய்யூர் அகரம் பகுதியில் உள்ள நாகர் தனியார் பள்ளியில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கலிட்டு, கோமாதா பூஜை செய்யப்பட்டதத் தொடர்ந்து, ஆசிரியைகள் பலர் மாணவிகளுடன் இணைந்து கும்மியடித்து நடனமாடினர். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் உற்சாகமாக நடைபெற்றன.

திருப்பூரில் கிட்ஸ் கிளப் தனியார் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். பாரம்பரிய உடையணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் காவடியாட்டம், கரகாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகளை கண்டுரசித்தனர். அதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர்.