​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

Published : Jan 11, 2019 7:43 PM

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

Jan 11, 2019 7:43 PM

சிறப்பு நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

20 ஆண்டுகளுக்கு முன் பேருந்துகள் உள்ளிட்ட பொதுச்சொத்துகளை கல்வீசித் தாக்கிய வழக்கில், அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள பாலகிருஷ்ண ரெட்டி, தண்டனையை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்த இடைக்கால மனு, நீதிபதி பார்த்திபன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரமேஷ், சித்தார்த் ஆஜராகி வாதிட்டனர். வழக்கில் 72ஆவது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் ஏதுமில்லை என அவர்கள் கூறினர்.

வழக்கில் 11ஆவது சாட்சியமாக இருந்த காவலர் ஒருவர், சம்பவ இடத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி இருந்ததாக மட்டும்தான் கூறியிருப்பதாகவும் அவர்கள் வாதிட்டனர். மேலும் காவல்துறை சாட்சியத்தை முழுமையாக சார்ந்திருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும் பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர். பாலகிருஷ்ணா ரெட்டி பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாகக் கூறுவதற்கு நேரடி சாட்சியம் ஏதும் இல்லாத நிலையில், விசாரணை நீதிமன்றம் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக கருத்தில் கொள்ளவில்லை என அவர்கள் கூறினர். பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மனு விசாரணைக்கு வந்த தொடக்க நிலையிலேயே தண்டனையை ரத்து செய்யக் கோருவது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினர். பாலகிருஷ்ணா ரெட்டி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதை சுட்டிக்காட்டி அவரது தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளித்தனர். இதைத் தொடர்ந்து தண்டனையை ரத்து செய்யக்கோரும் இடைக்கால மனு மீது இரவு 8 மணியளவில் தீர்ப்பளித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் கோரிக்கையை நிராகரித்தார். தற்போதைய நிலையில் இடைக்கால மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, மேல்முறையீட்டு வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டார். மேல் முறையீட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, தண்டனையை ரத்து செய்யக் கோரிக்கை வைத்தால், அப்போது நீதிமன்றம் பரிசீலிக்கும் என நீதிபதி பார்த்திபன் தெரிவித்தார்.