​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மா ராஜினாமா

Published : Jan 11, 2019 4:17 PM

சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மா ராஜினாமா

Jan 11, 2019 4:17 PM

சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்பு மற்றும் ஊரகக் காவல்படை பொது இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்துள்ளார். 

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவும், சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இந்த மோதல் பகிரங்கமாக வெடித்ததை அடுத்து, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி மத்திய அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா கடந்த புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் குழு நேற்று மாலை கூடியது. பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தலைமை நீதிபதிக்கு பதிலாக நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் இந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்க, மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்தார்.

இருப்பினும் 2க்கு ஒன்று என்ற பெரும்பான்மைப்படி, அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. வரும் 31 ஆம் தேதியுடன் அலோக் வர்மாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவர் தீயணைப்புத்துறை மற்றும் ஊரகக் காவல்படை பொது இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பிடிஐ செய்திய நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், வெளித் தலையீடுகள் இன்றி சிபிஐ செயல்பட வேண்டும் என்றும், அதன் நம்பகத்தன்மையை சிதைக்க முயற்சிகள் நடைபெற்றபோது தாம் பாதுகாக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.

தனக்கு தீங்கு விளைவிக்கும் உள்நோக்கம் கொண்ட ஒரேயொரு நபரின் தவறான, ஆதாரமற்ற, அற்பமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து தாம் மாற்றப்பட்டிருப்பது வேதனைக்குரியது என்றும் அலோக் வர்மா குறிப்பிட்டுள்ளார்.

தீயணைப்பு மற்றும் ஊரகக் காவல் பொது இயக்குநர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்ட அவர் ராஜினாமா செய்துள்ளார். சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்ட விவகாரத்தில் இயற்கை நீதிக்கு ஊறு விளைவிக்கப்பட்டிருப்பதாகவும் அலோக் வர்மா குற்றம்சாட்டியுள்ளார்.