​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி

Published : Jan 11, 2019 1:31 PM

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி

Jan 11, 2019 1:31 PM

சர்க்கரை மட்டுமே பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்புடன், சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் தருவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதி கோரி, தமிழ்நாடு அரசின், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன், இன்று பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், அரிசியின் தேவையை குறைப்பதற்காகவும், அரிசிக்கு மாற்றாக தேவைப்படுவோர் சர்க்கரையை கூடுதலாக பெற்றுக்கொள்ளவுமே, சர்க்கரை மட்டுமே பெறும்படியாக குடும்பஅட்டைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

சர்க்கரை மட்டுமே பெறுவோர் அனைவரும், பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இருப்பதையும் அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டி வாதிட்டார். எனவே, இந்த தடையுத்தரவை மாற்றி, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொங்கல் கொண்டாட ஆயிரம் ரூபாய் எனக்கூறி கொடுக்கப்படும் பணம், ஓட்டுக்காக தான் கொடுப்பதாக, மக்கள் நினைப்பதாக தெரிவித்தனர்.

மேலும், மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி அதிகளவில் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக கூறிய நீதிபதிகள், இதை தடுப்பதற்கு, ஏன், அரிசிக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.

மக்களுக்கு ஏகப்பட்ட இலவசங்கள் வழங்கப்படுவதாகவும், அதனை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

இன்னும், எத்தனை காலத்திற்கு தான் இலவசங்களை கொடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் வினவினர். இனிமேலாவது, இலவசங்களை கொடுப்பதை படிப்படியாக குறைப்பது குறித்து முடிவெடுக்குமாறும், நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ஒருவேளை, மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தே தான் தீர வேண்டும் என்று விரும்பினால், அதை அவர்களது வங்கி கணக்கில் எளிதாக செலுத்தாமல், 8 மணி நேரம் வரையில் வரிசையில் காக்க வைப்பது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாட்டில், பொங்கல் தொகுப்புடன், சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய், 95 விழுக்காடு பேருக்கு கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறிய அரசின் தலைமை வழக்கறிஞர், எனவே, சர்க்கரை அட்டைதரார்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில், தடையுத்தரவை மாற்றியமைக்குமாறும் கோரினார்.

இதையடுத்து, சர்க்கரை அட்டை குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு வழங்க அனுமதி அளித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். எந்த பொருளும் வேண்டாம் என்ற வகை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க கூடாது என நீதிபதிகள் ஆணையிட்டனர்.