2021ஆம் ஆண்டு டிசம்பரில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாகவும், இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும் தெரிவித்தார். 2020டிசம்பரிலும் 2021 ஜூலையிலும் 2 ஆளில்லா விண்கலங்களை விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து 2021டிசம்பரில் ககன்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்றும் சிவன் தெரிவித்தார். ககன்யான் விண்கலத்தில் செல்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்குத் தொடக்கநிலைப் பயிற்சிகள் இந்தியாவில் அளிக்கப்படும் என்றும், ரஷ்யாவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் சிவன் தெரிவித்தார். ககன்யான் விண்கலத்தில் செல்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் குழுவில் பெண்களும் இடம்பெறுவர் எனச் சிவன் தெரிவித்தார்.
விண்வெளித் துறைக்குத் தகுதியான ஆட்களை உருவாக்குவதற்காக நாட்டின் பல்வேறு நகரங்களில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்டும் என்றும் தெரிவித்தார். இந்திய மாணவர்களை இஸ்ரோவுக்கு வேலைக்கு எடுக்கும்போது, அவர்கள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்காது என்றும் சிவன் தெரிவித்தார்.