​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இணையத்தில் வெளியானது ரஜினியின் பேட்ட - அஜீத்தின் விஸ்வாசம்..

Published : Jan 11, 2019 6:37 AM



இணையத்தில் வெளியானது ரஜினியின் பேட்ட - அஜீத்தின் விஸ்வாசம்..

Jan 11, 2019 6:37 AM

நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட, நடிகர் அஜீத்குமாரின் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் திரையரங்கில் வெளியான சிலமணி நேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தமிழ்ராக்கர்ஸ்..... இந்த பெயரை கேட்டாலே தமிழ் திரை உலகம் அதிர்ந்து போய் கிடக்கிறது..! திரையரங்குகளில் வெளியாகும் புதிய திரைபடங்களை சூட்டோடு சூடாக இணையத்தில் வெளியிட்டு விடுவது தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் வழக்கம்..!

அந்தவகையில் 10 ந்தேதி அதிகாலை ரசிகர்களின் பேராதரவோடு வெளியான நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் நடிகர் அஜீத்குமாரின் விஸ்வாசம் ஆகிய இரு படங்களையும் அடுத்த சில மணி நேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் ஆன்லைனில் வெளியிட்டு விட்டது.

மதியம் 2 மணிக்கு பேட்ட படமும், இரவு 7.30 மணிக்கு விஸ்வாசம் திரைப்படம் ஆன்லைனில் வெளியானதாக கூறப்படுகின்றது. இந்த இரு திரைபடங்களையும் இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் பேட்ட மற்றும் விஸ்வாசம் படக்குழுவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரையரங்கில் வைத்து கேமரா மூலம் இந்த இரு படங்களும் திருட்டு வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கியூப் நிறுவனத்தின் ரகசிய குறியீட்டை கொண்டு, இந்த திருட்டு வீடியோக்கள் எந்த திரையரங்கில் படமாக்கப்பட்டது என்பது குறித்து படகுழுவினர் விசாரித்து வருகின்றனர்

தங்கள் அபிமான நடிகரின் படம் சிறப்பாக வந்திருப்பதாக திரையரங்கில் பார்த்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து கொண்டிருக்க சிலர் தங்கள் செல்போனில் திரைப்படத்தை பார்த்து விட்ட மகிழ்ச்சியில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள தனி திரையரங்குகளில் சீசனுக்கு தகுந்தபடி டிக்கெட் விலையை தாறுமாறாக ஏற்றி வசூலித்து வருவதாலும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பாப்கார்ன் உள்ளிட்ட உணவு பொருட்கள் மிதமிஞ்சிய விலையில் விற்கப்படுவதாலும், குடும்பத்தோடு திரையரங்கிற்கு செல்ல அஞ்சும் ரசிகர்கள் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை நாடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இத்தனைக்கும் பேட்ட திரைப்படத்தை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திரையரங்க கட்டணத்தையும், அங்கு விற்கப்படும் உணவு பொருட்களின் விலையையும் நியாயமாக நிர்ணயிக்காதவரை பார்வையாளர்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தேடி சென்று புதிய படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பதை தடுக்க இயலாது என்கின்றனர் ரசிகர்கள்.