​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா ? - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

Published : Jan 10, 2019 11:11 AM

8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா ? - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

Jan 10, 2019 11:11 AM

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இந்தியை எட்டாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாக்கப் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், எந்த மொழியையும் கட்டாயப் பாடமாக்கப் பரிந்துரைக்கப்படவில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு தங்கள் வரைவு அறிக்கையை அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக வைக்கவும், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும் அந்த வரைவு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் அறிவியல், கணிதப் பாடங்கள் எந்த மொழியில் கற்பிக்கப்பட்டாலும் அவற்றுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டுவரவும் பரிந்துரைத்துள்ளது.

பழங்குடியினர் பேச்சு வழக்குகளுக்கு இந்தி எழுத்துக்களைக் கொண்டுவரவும் பரிந்துரைத்துள்ளது. இப்போது தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், கோவா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 7 மாநிலங்களில் இந்தி கட்டாயப் பாடமில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

எட்டாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்கவும், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுவது இந்த 7 மாநிலக் கல்வியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் விளக்கமளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதியக் கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் எந்த மொழியையும் கட்டாயப் பாடமாக்கப் பரிந்துரைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.