​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்குறிச்சி உதயமாகும் புதிய மாவட்டம்

Published : Jan 08, 2019 12:56 PM

கள்ளக்குறிச்சி உதயமாகும் புதிய மாவட்டம்

Jan 08, 2019 12:56 PM

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தின் பெரிய மாவட்டமான விழுப்புரம் 7,194 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.  விழுப்புரம் மாவட்டத்தில்  11 எம்.எல்.ஏ. தொகுதிகள் , 13 வருவாய் வட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை 2 ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம், குமரகுரு எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய   குமரகுரு, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இதன் பின்னர் விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அது 2 ஆக பிரிக்கப்படுகிறது என்றார்.கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதாக கூறிய  அவர் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றார். 

நிர்வாக ரீதியாக பணிகளை மேற்கொள்ள சிரமமாக உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி பிரிக்கப்படுவதாகவும்,  கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை புதிய மாவட்டத்தில் அடங்கும் என்றும் அவர் கூறினார். புதிதாக உருவாக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தனி அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார்  என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த முதலமைச்சருக்கு எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் நன்றி தெரிவித்தனர். முதலமைச்சரின் அறிவிப்பால், தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக உள்ளது. கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிவதன் மூலம் பெரிய மாவட்டம் என்ற அந்தஸ்தை விழுப்புரம் இழந்துள்ளது