​​ அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

Published : Dec 07, 2018 1:14 PM

அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

Dec 07, 2018 1:14 PM

அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகார்களை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவப் பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடலுர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவப் பிரிவு மற்றும் எக்ஸ்ரே பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் டி.எஸ்.பி. தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 12 போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு, காய்ச்சல் பிரிவு பிணக்கூறாய்வு அறை உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3 பேர் சிக்கியதாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவ்ம் கூறப்படுகிறது. 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருந்துக்கிடங்கு மற்றும் அறுவை சிகிச்சைப் பொருட்கள் வைக்கும் பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சத்யசீலன் தலைமையில் 5 ஆய்வாளர்கள் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வார்டு வார்டாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையம் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. புஷ்பராஜ் தலைமையில் 5 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ஸ்கேன், எக்ஸ்ரே, முதலுதவி, பொதுவார்டு உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையில் அதிகாரிகள் இரண்டு பிரிவாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து மருத்துவமனையின் அனைத்து பிரிவிலும் அவர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய சோதனையில், ஊழியர்களிடமிருந்து இதுவரை ரூ.15 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே சாலையில் உள்ள அந்த மருத்துவமனையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சிவபாதசேகரன் தலைமையில் 15 லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரசவ வார்டு, ஸ்கேன் சென்டர், எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஊழியர்களிடமிருந்து இதுவரை 15 ஆயிரம் ரூபாயை அவர்கள் பறிமுதல் செய்யதுள்ளனர்.

திருவள்ளூரில் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சங்கர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் அறை, பச்சிளம் குழந்தைகள் வார்டு, மருந்தகம், பிணவறை என வார்டு வார்டாக அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். நண்பகல் 12 மணி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.